Thirukural

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)
மணக்குடவர் உரை:
கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தோழி சேட்படுத்தியவழி அவள் குறிப்பறிந்த தலைவன் தன்னுள்ளே சொல்லியது.) உறாதவர் போல் சொலினும் - புறத்தில் அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாராயினும்; செறார் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும். சேட்படுத்தலாவது, தலைமகன் தலைமகள் ஆகிய இருவரின் காதல் நிலைமைகளையும் முற்றுந் தெளிவாக அறிதற் பொருட்டும், தலைமகளை அருமைப்படுத்தற் பொருட்டும், தோழி தலைமகனை நெருங்க வொட்டாது சில நாள் நீக்கிவைத்தல். அங்ஙனம் சேட்படுக்கும்போது, எம் உறவினர் கடுங்கண் மறவர் என்றும், இவ்விடம்காவன் மிகுதி யுடைமையால் வரத்தகாது என்றும் அன்பிலாதவள் போலக் கடுஞ்சொற்களைச் சொல்லுதல் மரபு. ஆயினும், தலைமகன் அறிவுடையனாதலின், அத்தகைய சொற்களால் தளராது, தன் குறை முடிக்கக் கருதியே சேட்படுக்கின்றமை குறிப்பாலறிந்து, உலகியல்மேல் வைத்துக் கூறியதாகும் இக்குறட் கூற்று. இது வருகின்ற குறட்கும் ஒக்கும். 'செறார்' எனவே அன்புடைமை பெறப்படும். 'உறாஅ(தவர்),'செறா அர்' என்பன இசைநிறை யளபெடைகள். 'போல்' என்பது உண்மையில் உறாதவரன்மையைக் காட்டும். உம்மை எதிர்மறை.
கலைஞர் உரை:
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
விருப்பம் இல்லாதவள் போலப் பேசினாலும் வெறுப் பில்லாமல் பேசுகின்ற சொற்களிலிருந்து விருப்பம் இருக்கிற தென்பதை விரைவில் கண்டுகொள்ள முடிந்தது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
வெளிப்பார்வைக்கு அயலார் போலக் கடுஞ்சொல் சொன்னாலும் மனத்தில் பகைமையில்லாதவருடைய சொல் விரைவில் அறிந்து கொள்ளப்படும்.
தமிழ்க்குழவி உரை:
வெளிப்படையாக அறியாதவர்போல் பேசினாலும் பகைமையில்லாத அன்பை, காதலை அச்சொற்கள் உணர்த்திவிடும்.
Translation
Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known.
Explanation
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
Transliteration
Uraaa Thavarpol Solinum Seraaarsol Ollai Unarap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1096