Thirukural

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர். இஃது அழுக்காறுடையா ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உடுப்பதும் உண்பதும் கீழ் காணின் - பிறர்தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும் கீழ்மகன் காணுமாயின்; பிறர்மேல் வடுக்காண வற்று ஆகும் - அவற்றைப் பொறாது அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறவல்லவனாம். 'உடுப்பது' , 'உண்பது' தொழிற்பெயர்கள்.இவற்றைத் தலைமை பற்றிக் கூறியமையால், அணிதல், பூணுதல்,பருகுதல், ஊர்தல் முதலிய பிற செல்வவினைகளுங் கொள்ளப்படும். கண்டவளவிற் பொறாமை கொள்ளுதலால் 'காணின்' என்றும், பொருந்தப் பொய்த்தல் வல்லமை தோன்ற 'வற்றாகும்' என்றும், கூறினார்.வல்லது- வற்று(வல்+து), 'உடுப்பதூஉம்', 'உண்பதூஉம்' இன்னிசையளபெடைகள். 'கீழ்' ஆகுபெயர். இக்குறளால் கீழ்மகன் பிறர் செல்வங் கண்டு பொறாமைப் படுதல் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
யாராவது நல்ல உடை உடுத்து நல்ல உணவுண்டு சுகமாக இருப்பதைக் கண்டால், கயவர்கள் அவர்கள்மீது குற்றம் கற்பித்துத் தூற்றுவதற்கே தம்முடைய திறமையைச் செலுத்துவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மற்றவர்கள் செல்வத்தால் நன்கு உடுத்திக்கொள்ளுவதையும் உண்ணுவதையும் கயவன் கண்டுவிட்டால், அவற்றைப் பொறாமல் அவர்மீது குற்றம் இல்லையென்றாலும் உண்டாக்கிச் சொல்வதில் வல்லவனாவான்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் நன்றாக உடுத்து உண்டு மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டாலே பொறாமை கொண்டு குற்றம் காண்பார்கள் கயவர்கள்.
Translation
If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace?.
Explanation
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
Transliteration
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel Vatukkaana Vatraakum Keezh

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1079