|
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்-ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர்.
எழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின், ஏழேழ் மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண். நீக்கின வினையின் விரைவும் நிறைவுந் தோன்றத் 'துடைத்தல்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும்
மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப்
போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால
எல்லையே கிடையாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏன் எனில்) துன்பக் காலத்தில் வந்து உதவி செய்து துன்பங் களைத் துடைத்துவிட்டவர்களுடைய உறவை நன்றியுள்ளவர்கள் ஏழேழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தமக்கு உண்டாகிய துன்பத்தினைப் போக்கியவருடைய நட்பினை எழுமையினையுடைய எழுபிறப்பிலும் பெரியோர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்புற்ற வேளையில் துணையாகித் துயரம் போக்கியவர் நட்பை எழுகின்ற பிறப்பு எத்தனையாயினும் மறவாமல் மனதுள் வைத்துப் போற்றுவர்.
|
|
Translation
|
|
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
|
|
Explanation
|
|
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
|
|
Transliteration
|
|
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|