Thirukural

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.

இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி-வறுமை யென்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத தோணி; கரவுஎன்னும் பார்த்தாக்கப் பக்குவிடும்-வழியிலுள்ள கரத்தல் என்னும் பாறையால் தாக்கப்படும்போது பிளந்துபோம். உழைப்பாற் கடக்கவேண்டிய கடலை இரப்பாற் கடக்கத் தொடங்கியவன், சேதமின்றித் தன்தோணியைச் செலுத்த முடியாமையால் , 'ஏமாப்பி றோணி' என்றார். இது வறுமையென்னுங் கடலைப்பற்றிக் கூறாது அக்கடலிலுள்ள தோணியையும் பாறையையுமே கூறியதனால் , சினையுருவகம்.
கலைஞர் உரை:
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிச்சையெடுத்தல் என்னும் நங்கூரமில்லாத மரக்கலம் (போன்ற மனம்), வைத்துக்கொண்டே இல்லை யென்று சொல்லும் (கன்னெஞ்சாகிய) பாறையில் மோதினால் உடைந்து போகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இரத்தல் என்னும் பாதுகாப்பில்லாத தோணி, மறைத்தல் என்னும் வன்னிலத்தில் தாக்குமாயின் பிளந்துபோகும்.
தமிழ்க்குழவி உரை:
இரத்தல் என்கின்ற பாதுகாப்பற்றப் படகு, மறைத் தொழுகுதலாகியக் கரவு மனப் பாறையின் தாக்குதலால் உடைந்து சிதறிவிடும்.
Translation
The fragile bark of beggary Wrecked on denial's rock will lie.
Explanation
The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.
Transliteration
Iravennum Emaappil Thoni Karavennum Paardhaakkap Pakku Vitum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1068