Thirukural

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று.

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி. இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இரப்பின்-இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; கரப்பார் இரவன்மின் என்று-தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன்-இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன். இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். ’கரப்பாரிரவன்மின்’ செய்யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத்தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின் வருநிலை. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.
கலைஞர் உரை:
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிச்சையெடுக்க நேர்ந்தாலும், வைத்துக்கொண்டு இல்லையென்று சொல்லுகிறவர்களிடம் பிச்சை கேட்கவேண்டாம் என்று பிச்சை கேட்க எண்ணுகிறவர்களையெல்லாம் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
'நீங்கள் யாசிக்க வேண்டுமென்றால், உள்ளது மறைப்பவர்களிடம் யாசிக்காதிருங்கள் ' என்று சொல்லி யாசிப்பவர்களிடமெல்லாம் யான் சென்று யாசிப்பேன்.
தமிழ்க்குழவி உரை:
இரந்து நிற்கும் சூழலில் கூடப் பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்வாரின் முன் சென்று இரவாமல் இருத்தல் வேண்டும்.
Translation
One thing I beg of beggars all, 'If beg ye may, Of those who hide their wealth, beg not, I pray'.
Explanation
I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly".
Transliteration
Irappan Irappaarai Ellaam Irappin Karappaar Iravanmin Endru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1067