|
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின்-தம்மையவமதித்துப் பேசாதும் இழிவாகக் கருதாதும் விரும்பிய பொருளைக் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து-தன்மானமுள்ள இரப்போரின் உள்ளம் மகிழ்ச்சியாற் பொங்கி மேன்மேலும் உள்ளுற இன்புறுந் தன்மையதாம். எள்ளுதல் உள்ளத்தின் தொழில்; கருத்தளவாய் நிற்பது; இகழ்தல் வாயின் தொழில்; சொல்வடிவில் வெளிப்படுவது. புகழ்தலுக்கு எதிர் இகழ்தல். ’இகழ்ந் தெள்ளாது’ எனவே நன்கு மதித்தலும் இன்சொற் சொல்லுதலும் பெறப்படும். கரவாமையோடு இகழாமையும் சேரவே, மானமுள்ள இரப்போக்குப் பெருமகிழ்ச்சி விளைக்கும் என்பதாம். இவ்வாறு குறளாலும் இரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிச்சை கேட்கிறவர்களை இழிவாக அவமதித்துப் பேசாமல் மனம் மகிழ்ந்து கொடுப்பவர்கள் உண்டானால் பிச்சை யெடுப்பதன் துன்பம் குறைந்து இன்பம் உண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்மை அவமதித்துப் பேசாமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்பவரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இகழ்ந்துபேசி ஏளனம் செய்யாமல் கேட்பாருக்கொன்று ஈவாரைக் காணின் இரப்பவர் நெஞ்சம் மகிழ்ச்சியால் இன்புறும்.
|
|
Translation
|
|
If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.
|
|
Explanation
|
|
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.
|
|
Transliteration
|
|
Ikazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam
Ullul Uvappadhu Utaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|