|
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நல்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும்-சிறந்த நூற்பொருளைத் தெளிவாக அறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொன்னராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வுபடும்-வறியவர் சொல்லுஞ் சொல் தன் பொருட் சிறப்பை இழந்துவிடும். பொருட் சிறப்பிழத்தல், கேட்பாரின் இகழ்ச்சியினாலும் பொருளுதவி வேண்டுவாரென்னும் அச்சத்தினாலுமாம். ’’நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன் நுவலுங்கால்-நொய்யசிறு பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ காற்றெனின் அஞ்சும்அவன் கேட்ப தறிந்து.’’ என்னும் நீதிவெண்பாச் செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. உம்மை உயர்வு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வறுமை இருந்தும் குற்றம் செய்யாதவர்களும் உண்டு. ஆனாலும் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். அவர்கள்) நல்ல அறிவை ஆராய்ச்சியுடன் சொன்னாலும் ஏழைகள் சொல்லுகின்ற அறிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பயனற்றவையாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்ல நூல்களின் பொருள்களை நன்கு அறிந்துணர்ந்து சொன்னாலும் வறுமையில் இருப்பவரது, சொல்லானது பொருள் இல்லாது பயனின்றிப் போகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சிறந்த பொருளைத் தேர்ந்து தெளிவாகப் பேசினும் வறுமையுற்றார் வாய்ச்சொல் அதற்குரிய மதிப்பைப் பெறாது.
|
|
Translation
|
|
Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.
|
|
Explanation
|
|
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.
|
|
Transliteration
|
|
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|