|
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஏரினும் எரு இடுதல் நன்று- பயிர் செய்யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; கட்டபின்- அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; நீரினும் அதன் காப்பு நன்று- உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம். 'ஏர்' ஆகுபொருளது. காத்தல் பட்டிமாடு பறவைகள் திருடர் பகைவர் முதலியவற்றால் அழிவும் இழப்பும் நேராவாறு காவல் செய்தல். உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், காவல் செய்தல் ஆகிய முதன்மையான வினைகளை முறைப்படி குறிக்கும் போதே அவற்றை ஒப்புநோக்கிச் சிறந்தவற்றை விதந்து கூறினார். 'ஆல்' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும் கவனிக்கவேண்டியவை:) முக்கியமாக, நிலத்தை ஆழமாக உழவேண்டும். அதைவிட முக்கியமாக எருப் போட வேண்டும். அதைவிட முக்கியமாகக் களையெடுத்து நீர் பாய்ச்சுவதைவிடப் பயிருக்கு அழிவோ நோயோ வந்துவிடாதபடி பாதுகாக்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பயிர்க்கு உழுதலைவிட எருப்போடுதல் நல்ல தாகும்; சுளை எடுத்த பிறகு அப்பயிரினைக் காப்பாற்றுதல் நீர்ப்பாய்ச்சுதலைவிட நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நிலத்தின் பயிர்செய்ய, உழுதல் நன்று, எருவிடுதல் அதனினும் நன்று, நீர்பாய்ச்சுதல் நன்று, களைகளை அகற்றிக் காத்தல் அதனினும் நன்று.
|
|
Translation
|
|
To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.
|
|
Explanation
|
|
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
|
|
Transliteration
|
|
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|