|
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அமர் அகத்து வன்கண்ணர் போல-போர்களத்திற்குச் சென்றார் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்பு ஒரு சில கடுமறவர் மேலேயே இருத்தல்போல; தமர் அகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே-ஒரு குடியிற் பிறந்தார் பலராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பு அதைச் செய்யவல்ல ஒரு சிலர் மேலேயே உள்ளதாம். விளக்கம்பற்றி உவமத்திற்கும் பொருட்கும் வேண்டிய சொற்கள் வருவிக்கப்பட்டன. உம்மை இறந்தது தழுவிய எச்சம். ஏகாரம் பிரிநிலை. இக்குறளால் குடிசெய்வாரின் பொறுப்புக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
போர்க்களத்தில் வெற்றி பெறும் பொறுப்பெல்லாம் சேனையில் உள்ள போர் வீரர்களில் தைரியம் உள்ளவர்களுடைய பாரமாகவே இருப்பதுபோல், ஒரு குடும்பத்திலும் அதை வலிமையுள்ள தாக்கும் பொறுப்பெல்லாம் அக்குடும்பத்தில் திறமையுள்ளவர்களுடைய பாரமாகத்தான் இருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
போர்க்களத்திற்குச் சென்றவர்களில் போரை தாங்கும் தன்மை, மிகுந்த வீரம் செறிந்தவர் மேலாகுதல் போலக் குடியில் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் தாங்குதல் வல்லவர் மேலதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
போர்க்களத்தில் வலிமையுடையவர்களுக்கே பொறுப்புகள் அமைவது போல குடும்பத்தில் ஆற்றல் கொண்டு உழைப்பவர்களுக்கே பொறுப்புகள் அமையும்.
|
|
Translation
|
|
The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.
|
|
Explanation
|
|
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.
|
|
Transliteration
|
|
Amarakaththu Vankannar Polath Thamarakaththum
Aatruvaar Metre Porai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|