Thirukural

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்அறம்நாணத் தக்கது உடைத்து.

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து. ('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம். நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.
கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) இன்னொருவர் செய்தால் அதுபழியான காரியம் என்று தான் சொல்லுகிற ஒரு காரியத்தைத் தான் கூசாமல் பிறருக்குச் செய்வானாயின், அவன் வாழ்க்கை அறக் கடவுளால் அருவருக்கத் தக்கது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பிறர் நாணமடையக் கூடிய பழியை ஒருவன் நாணமின்றிச் செய்வானாயின் அச்செயல் அவனைவிட்டு.. அறம் நீங்கிவிடுகின்ற குற்றத்தினை உடையதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் நாணத்தக்க செயல்செய்து தான் நாணம் உறாதவனாக இருப்பின், அறம் நாணி அவனை விட்டு விலகும்.
Translation
Though know'st no shame, while all around asha med must be: Virtue will shrink away ashamed of thee!.
Explanation
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
Transliteration
Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin Aramnaanath Thakkadhu Utaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1018