|
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடைமையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
யார்மாட்டும் எண்பதத்தால் - எல்லாரிடத்தும் எளிய செல்வியராயிருத்தலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - பண்புடையராய் ஒழுகும் நெறியை எளிதாயடையலாமென்று கூறுவர் அறநூலார். நற்குணங்கள் நிறைந்து எளிய செவ்வியராகவு மிருப்பின், பண்புடைமைதானே யுண்டாகுமாதலின், 'எண்பதத்தா லெய்த லெளி தென்ப ' என்றார். எளிய செவ்வியாவது, எளிதாய்க் கண்டுரையாடற்கேற்ற நிலைமை. 'என்ப' என்றதனால், திருக்குறட்கு முன்பும் தமிழற நூல்கள் இருந்தமை யறியப்படும்.
|
|
கலைஞர் உரை:
|
|
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(யாரிடத்திலும் பண்புடையவனாக நடந்து கொள்ளும் வழக்கம் எதுவென்றால், மிருதுவான இரக்க குணமுடையவனாக யாரும் சுலபமாகத் தன்னிடம் (எதையும் சொல்லிக்கொள்ள) அணுகக்கூடிய வனாக இருப்பது என்பதுதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
யாரிடத்திலும் எளிய தன்மையராய் இருத்தல் பண்புடைமையென்னும் அரியதான நல்வழியை அடை தற்கு எளிது என்று நூலோர் சொல்லுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எவரிடத்தும் எளிமையாகப் பழகும் தன்மையால் பண்புடைமை ஆகிய நலம் எளிதாக வாய்க்கும்.
|
|
Translation
|
|
Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.
|
|
Explanation
|
|
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.
|
|
Transliteration
|
|
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|