|
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குடிச் சிறப்புடையவனாய்ப் பிறந்தவனிடத்தில் அன்பின்மை காணப்படின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்- உலகம் அவனை அக்குடிப் பிறப்புப் பற்றி ஐயுறவு கொள்ளும். நாரின்மையாவது " நகையீகையின் சொ லிகழாமை நான்கும்" இன்மை 'தோன்றின்' என்பது உண்மையானஉயர்குடிப் பிறப்பில் நாரின்மை பெரும்பாலுந் தோன்றாமையைக் காட்டி நின்றது. நிற்கவே, நாரின்மைத் தோற்றம் உயர்குடிப் பிறப்பின்கண் ஐயுறவை யுண்டுபண்ணும் இயல்பாயிற்று. நலம், குலம் என்பன ஆகுபொருளன. உலகம் என்னும் எழுவாய் அவாய்நிலையால் வந்தது. 'ஐயப்படல்' என்பது பாடமாயின் ஐயப்படுக என ஏவலாக்கி யுரைக்க. இவ்விரு குறளாலும் குடிப்பிறந்தாரின் தன்மை திரிந்தவிடத்து உண்டாகும் இழிவு கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(செல்வமிருந்தாலும் செருக்கில்லாத அன்புடைமையால் தான் குடிப்பிறப்பு விளங்கும். செல்வம் இருந்து அன்பில்லா தவனை) ஒருவன் செல்வ நலங்களுடன் சுகமாக வாழும்போது அவனிடத்தில் அன்பில்லாத தன்மை இருக்கக் கண்டால், அவன் நல்ல குடிப்பிறப்பு உள்ளவனல்லன் என்று சந்தேகிக்க இடமுண்டு.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்குடியில் பிறந்தவனாக வருபவனிடத்தில் அன்பில்லாமை காணப்படுமானால் அவனை அக்குலப் பிறப்பின் கண்ணே இவ்வுலகம் ஐயப்படும் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவன் செயல்பாடுகளில் அன்பின்மை தோன்றுமாயின் அவன் பூர்வீகம் பற்றியே இவ்வுலகம் ஐயம் கொள்ளும்.
|
|
Translation
|
|
If lack of love appear in those who bear some goodly name,
'Twill make men doubt the ancestry they claim
|
|
Explanation
|
|
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
|
|
Transliteration
|
|
Nalaththinkan Naarinmai Thondrin Avanaik
Kulaththinkan Aiyap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|