Thirukural

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும்என் பார்.

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மாசு அற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர். சலம்பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மையொடு பொருந்தாத செயல்களைச் செய்யார். பூட்கை பூணுங்கொள்கை. இம்முன்று குறளாலும் குடிப்பிறந்தார் வறுமையுற்றபோதும் தங்குடிப் பண்பிற் குன்றாரென்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறர் தமக்குத் தீமை செய்துவிட்டாலும்) குற்றமற்ற தம்முடைய இனமரபைப் பின்பற்றி வாழும் குடிப்பிறந்தார் ஒருவர் மீது தமக்குள்ள கோபத்தின் காரணமாக முறை தவறியும் எதையும் செய்துவிட மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
குற்றமின்றி வருகின்ற தமது குடிமரபினோடு ஒத்து வாழக் கடவோம் என்று வாழ்பவர்கள் வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையால் தமக்குப் பொருந்தாத செயல் களைச் செய்ய மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
குற்றம் புரியாத நற்குடிப் பெருமையுடன் வாழ நினைப்பவர்கள், வஞ்சகமான தரம் தாழ்ந்த செயல்களைச் செய்வது இல்லை.
Translation
Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame.
Explanation
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
Transliteration
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra Kulampatri Vaazhdhum En Paar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 956