Thirukural

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)
மணக்குடவர் உரை:
பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
குடிப்பிறந்தார்- உயர்குடிப் பிறந்தவர் அடுக்கியகோடி பெறினும் - பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; குன்றுவ செய்தல் இலர்- தம் ஒழக்கங்குன்றுவதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யார். செல்வம் பொதுவாகக் காசளவில் மதிக்கப்படுவதனாலும், நன்கொடையாகவுங் கையூட்டாகவுங் கொடுக்கப்பெறுவது பெரும் பாலுங் காசேயாதலாலும், காசுகளில் உயர்ந்தது பொற்காசாதலாலும், இங்குக் கோடி என்பதற்குக் கோடிப் பொன் என்று உரைக்கப்பட்டது. பொன் என்றது உயர்ந்த பொற்காசை. 'கோடி', 'பொன்' என்பன ஆகுபெயர்கள். 'அடுக்கிய கோடி' என்று பொதுப்படச் சொன்னதனால், தாமரை (கோடா கோடி), சங்கம் (பத்துக் கோடா கோடி) பரதம் (இலக்கங் கோடிக்கோடா கோடி) முதலிய மாபேரெண்களெல்லாம் தழுவப்பெறும் உம்மை உயர்வு சிறப்போடு கூடிய எச்சம்.
கலைஞர் உரை:
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அது மட்டுமல்ல) கோடானு கோடி பணம் வருவ தானாலும் குடிப்பிறந்தவர்கள் கண்ணியக் குறைவான எதையும் செய்ய மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பலவாக அடுக்கிய கோடி அளவினதாகிய பொருளைப் பெற்றாலும் உயர்ந்த குடியின்கண் பிறந்த வரிகள் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்ய மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
பலகோடிப் பொருட்களை இனாமாகப் பெறுவதாய் இருந்தாலும் கூட நற்குடிப்பிறந்தவர்கள் தரம் தாழ்ந்த செயல்களைச் செய்வது இல்லை.
Translation
Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin.
Explanation
Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
Transliteration
Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal Ilar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 954