Thirukural

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். (காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்; கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு. இது நாணம் போமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு- கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு; நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் - நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள். பெற்ற தாய்க்கும் வெறுப்பை விளைத்தலின் 'பேணா' என்றும், ஒழுக்கக் கேட்டை மட்டுமன்றி உயிர்க் கேட்டையும் உண்டாக்குதலின் 'பெருங்குற்றம்' என்றும் , கள் வெறியர் மானத்தை அறவே இழந்து விடுதலின் 'நாண்.......புறங்கொடுக்கும்' என்றும், கூறினார். 'நல்லாள்' என்பது அழகுபற்றிப் பெண்ணிற் கொருபெயர். 'நல்லபிள்ளை' என்னும் உலக வழக்கையும், மைப்படு மழைக்கணல்லார் (சீவக.2881) என்னும் செய்யுள் வழக்கையும், நோக்குக.நாண் மென்மைக் குணமாதலின் பெண்ணாக வுருவகித்தார். "பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி" என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. 'கள்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் கள்ளுண்டல் ஒளியிழத்தற்குக் கரணியமென்று கூறப்பட்டது.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கள்ளைக் குடிப்பது என்ற மிகவும் விரும்பத் தகாத பெருங் குற்றத்தைச் செய்கிறவர்களை நாணம் என்ற அழகான பெண் தன் முகமெடுத்துக்கூடப் பார்க்காமல் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டுப் போய்விடுவாள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கள் குடித்தல் என்று சொல்லப்படுகின்ற மிக்க குற்றத்தினையுடையாரை, நாண் என்று சொல்லம் படுகின்ற மிக்க உயர்ந்தவள் விட்டு நீங்குவாள்.
தமிழ்க்குழவி உரை:
நாணம் என்னும் நல்ல பண்பு, மதுவருந்தும் பெருங்குற்றம் உடையார் முன்பு நில்லாது அகன்று விடும்; இழிநிலை அடைவர்.
Translation
Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn
Explanation
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
Transliteration
Naanennum Nallaal Purangotukkum Kallennum Penaap Perungutrath Thaarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 924