Thirukural

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தம் வயின் குற்றம் மறையாவழி- புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து; அற்றம் மறைத்தலோ புல் அறிவு- தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம். 'அற்றம்' ஆடையற்ற நிலை . மறைத்தல் இரண்டனுள் முன்னது கண்ணிற்குத் தோன்றாதவாறு செய்தல்; பின்னது இல்லாதவாறு செய்தல் . அற்றம் மறைத்தலினும் குற்றம் மறைத்தலே உயர்திணை மாந்தனுக்கு இன்றியமையாத தென்பது கருத்து. ஓகாரம் பிரிநலை.
கலைஞர் உரை:
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
புல்லறிவாளன் தனக்குப் பழக்கமில்லாத வேலையைப் பழகியிருப்பதாகச் சொல்லிவிட்ட பொய்யை மறைக்க முயலும் மாதிரியே, அவனிடத்திலுள்ள, மற்ற எல்லாக் குற்றங்களும் வெளியாகிவிட வழி உண்டாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
புல்லறிவாளர்கள் தம்மிடத்தில் நிகழும் குற்றங்களை நீக்காவிட்டால், ஆடைகளினால் மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தலும் அற்ப அறிவே யாகும்.
தமிழ்க்குழவி உரை:
தான் செய்யும் குற்றங்களைத் தவிர்த்து விடாமல், ஒருவன் அதன் விளைவுகளைத் தவிர்க்க முயலுதல் அறியாமை ஆகும்.
Translation
Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled reveal.
Explanation
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
Transliteration
Atram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa Vazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 846