|
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.
நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அன்பு தான் வாழ்க்கைக்குச் செழிப்புண்டாக்குகிறது) நெஞ்சத்தில் அன்பில்லாதவர்களுடைய வாழ்க்கை, நீர்ப்பசை இல்லாத கெட்டியான நிலத்தில் முளைத்துவிட்ட மரம் உயிரோ டிருந்தாலும் வற்றிப் போய்ச் செழிப்பில்லாமல் இருப்பதுபோல், வாழ்க்கை நடந்தாலும் இன்பம் இருக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பாலைநிலத்தில் பட்டுப்போனமரம் தளிர்க்குமா? அது போலத்தான் அன்பில்லா நெஞ்சில் உயிர் தழைத்திராது.
|
|
Translation
|
|
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
|
|
Explanation
|
|
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
|
|
Transliteration
|
|
Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|