|
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தௌ¤வுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம். நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு ஏமம்-படைக்கு அரணான பண்புகளாம். தறுகண்மையாவது சாவிற்கும் கொடிய நோவிற்கும் சிறிதும் அஞ்சாமை. மறம் முதலிய நான்கினாலும், முறையே பகைவரைத் தப்பாது வெல்லுதலும். தமக்கும் தம் அரசனுக்குந் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடுவார் மீது படைக்கலந் தொடுதலும் பெண்டிர் கற்பழித்தலும் அரசனது ஏவலின்றிக் கொள்ளையடித்தலும் செய்யாமையும், அறை போகாமையும் பெறப்பட்டன. அரண்போற் பாதுகாப்புச் செய்யும் பண்புகளை அரணென்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அச்சமற்ற தன்மை, (வீரருக்குத் தகாத பழி பாவங்களைச் செய்துவிடக் கூடாதென்ற) மானமுடைமை, (பார்த்தவர்கள் மதிக்கும்படியாக அணிவகுப்புடன்) கம்பீரமான வழிநடை, மேற்கொண்ட போரை நடத்த வேண்டிய (திட்டத்திலும் முறையிலும்) தெளிவான அறிவு ஆகிய இந்த நான்கும் ஒரு சேனையின் பெருமைக்குப் பாதுகாப்புக்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
வீரமும் மானமும் மாட்சிமைப்பட்ட வீரர் வழியில் செல்லலும் நம்பிக்கையுள்ளதும் ஆகிய நான்கு குணங்களுமே சேனைக்குப் பாதுகாப்பாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வீரம், மானம், அறவழி நிற்கும் ஆர்வம், தெளிந்த பார்வை இவை நான்கும் ஒரு படைக்குப் பாதுகாப்பாய் அமைவன.
|
|
Translation
|
|
Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.
|
|
Explanation
|
|
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
|
|
Transliteration
|
|
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|