Thirukural

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.)
மணக்குடவர் உரை:
அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை. வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.
தேவநேயப் பாவாணர் உரை:
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சாவன்கண்-நீண்ட நேரம் பொருது களைத்த விடத்தும், தோல்வி நேர்ந்தால் மேல் நேரக்கூடியவற்றிற்கெல்லாம் அஞ்சாது நின்று பொரும் கடுமறம்; தொல் படைக்கு அல்லால் அரிது-அரசர்க்கு வழி வழியாகத் தொடர்ந்து வரும் நிலைப்படைக்கு அல்லாமல் வேறுவகைப் படைக்கு உண்டாகாது. நிலைப்படை கூலிப்படை யென்றும், நாட்டுப்படை காட்டுப்படை யென்றும், துணைப்படை பகைப்படை யென்றும் படைகள் மூவேறு வகையில் இவ்விரண்டாக வகுக்கப்படும். கூலிப்படை போர்ச்சமையத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது. நாட்டுப்படை செங்குந்தர் கைக்கிளையர் படை போல்வது. காட்டுப்படை கள்ளர் மறவர் படை போல்வது. நிலைப்படை என்றும் நாட்டுப் படையாகவே யிருக்கும். அது மூலப்படையெனவும் படும். மூலம் என்னும் தென்சொல்லின் திரிபே மௌலம் என்னும் வடசொல்லும். துணைப்படை என்பது தனித்தவிடத்து நட்பரசர் படையையும் போர்க்களத்தில் பகைப்படையல்லாத தன்படைத் தொகுதியையுங் குறிக்கும். வழிமுறைப் பண்பு வரவர வளர்ந்தும் இயற்கையாக அமைந்தும் இருக்குமாதலாலும், வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்த அரசனுக்கு நன்றியறிவாகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் மறவ ரியல்பாதலாலும், 'தொல்படைக் கல்லா லரிது' என்றார். "சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள் ஆருயி ரென்னும் அவிவேட்டார் ஆங்கஃதால் வீரியரெய் தற்பால வீடு. (பு,வெ 8:30) "வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்டனையும்-கொல்களிறும் மாவும்" கொடுத்துத் தொல்படையைப் போற்றுக என்பது குறிப்பு. இழிவு சிறப்பும்மை தொக்கது.
கலைஞர் உரை:
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
யுத்தம் மூண்டுவிட்டபோது துன்பங்களுக்கு அஞ்சாமல் போர் புரியக்கூடிய தைரியம் யுத்தம் இல்லாத சமாதான காலங்களிலும் யுத்தப் பயிற்சி செய்துகொண்டே இருக்கிற சேனைக்கல்லாமல் மற்றவர்களுக்கு வராது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தான் சிறிதாக இருந்த இடத்தும் போரில் அழிவு வந்தால் அஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை இவனுடைய முன்னோரைத் தாங்கிவரும் படைக்கு (தொன்றுதொட்டு வருவது) அல்லாமல் உளதாகாது.
தமிழ்க்குழவி உரை:
போரில் தளர்வுற்ற போதும் துன்பம் கண்டு துவண்டு போகாமல் துணிந்து போரிடும் ஆற்றல் பழமையும். பெருமையும் உடைய படைக்கே உரியது.
Translation
In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show.
Explanation
Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.
Transliteration
Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth Tholpataik Kallaal Aridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 762