Thirukural

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொருளைச் செய்க-வெற்றிபெறும் வினையை மேற்கொள்ள விரும்பும் அரசர் செல்வத்தை நிரம்ப ஈட்டுக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்-அவர்தம் பகைவரின் வீறாப்பை அறுத்தொழிக்கும் படைக்கலம் அதனைப் போற் கூரியது வேறொன்றுமில்லை. பொருள் பெறுகவே படையும் நட்பும் பெருகும். அதுகண்டு பகைவர் தாமே அடங்குவர். அல்லது பெரும்படை கொண்டு போரால் அடக்கப்படுவர் என்பது கருத்து. எஃகு உருக்கு. அது இங்கு உருக்கினாற் செய்யப்பட்ட படைக்கலத்தைக் குறித்ததனால் ஆகுபெயர், பொருள் வலிய பகையையும் அழிக்க வல்லதாதலால், அதனை வலிய பொருளையும் அறுக்கும் அரமாக அல்லது ஈர்வாளாக உருவகித்தார். பொருளைப்போற் பகையழிக்க வல்லது வேறொன்று மின்மையின், 'அதனிற் கூரியது இல்' என்றார். இது செருக்கை மரமாக அல்லது இரும்பாக உருவகியாமையால் ஒருமருங் குருவகம்.
கலைஞர் உரை:
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது
சாலமன் பாப்பையா உரை:
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையால் செல்வத்தை முயற்சி செய்து சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால்) பகைவர்களுடைய கர்வத்தை அடக்குவதற்கு அதைவிடக் கூர்மையான ஆயுதம் வேறில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தமக்கு ஒன்று உண்டாகக் கருதுபவர்கள் பொருளினை உண்டாக்குதல் வேண்டும். தமது பகைவர் செருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவேயாம். அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை.
தமிழ்க்குழவி உரை:
செல்வத்தை ஈட்ட வேண்டும், தன் பகைவரின் ஆணவத்தை அழிக்கின்ற கூரிய வேல், அதனைப் போல் வேறெதுவும் இல்லை
Translation
Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is known.
Explanation
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
Transliteration
Seyka Porulaich Cherunar Serukkarukkum Eqkadhanir Kooriya Thil

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 759