|
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும். இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொருள் என்னும் பொய்யா விளக்கம்-செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தாவிளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்-தன்னை உடையவர்க்கு அவர் கருதிய தேயத்துச் சென்று பகையென்னும் இருளைப் போக்கும். எக்காலத்தும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாதலாலும் எல்லாரையும் விளங்கச் செய்தலாலும், 'பொய்யா விளக்கம்' என்னும்; ஏனை விளக்கொடு வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும், பகையை விரைந்தழித்தல் பற்றி 'இருளறுக்கும்' என்றும், கூறினார். பகையென்னும் இருள் என்னாமையால் இது ஒருமருங் குருவகம். இம்மூன்று குறளாலும் செல்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது
|
|
கலைஞர் உரை:
|
|
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதுமட்டுமல்லாமல்) செல்வம் என்னும் விளக்கு மட்டும் கையிலிருந்தால், அதை உடையவன் எந்தத் தேசத்துக்குப் போனாலும் அவனுக்கு வழிகாட்டவும் அவனிடம் பிரகாச முண்டாக்கவும் அது தப்பாமல் உதவும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருள் என்று கூறப்படுகின்ற பொய்யாத விளக்கானது தன்னை உடையவர்க்கு அவர் நினைத்த தேசத்திற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருள் என்பது ஒரு பொய்யா விளக்கு. அதனால் எண்ணிய இடத்திற்குச் சென்று இருளென்னும் துன்பத்தை ஒழித்து வெற்றி பெறலாம்.
|
|
Translation
|
|
Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.
|
|
Explanation
|
|
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
|
|
Transliteration
|
|
Porulennum Poiyaa Vilakkam Irularukkum
Enniya Theyaththuch Chendru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|