|
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொருள் அல்லவரை-பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும்; பொருளாகச் செய்யும் பொருள் அல்லது-மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை-சிறந்த பொருளொன்று இவ்வுலகத்தில் இல்லை. மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செய்தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செய்தல். இழிவு சிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. பொருட்பின்வருநிலை வரையறைப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கச் செய்கிற செல்வத்தைவிட மக்கள் தேடவேண்டிய பொருள் வேறொன்றும் இல்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கப்படுபவராகச் செய்யவல்ல பொருள் அல்லாமல் வேறு ஒருவனுக்குப் பொருளாவதில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு பொருளாக மதிக்கத் தகுதியில்லாதவரையும் மதிக்க தகுதியுடையவராகச் செய்வது பொருளே; அது தவிர வேறெதுவும் இல்லை.
|
|
Translation
|
|
Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.
|
|
Explanation
|
|
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
|
|
Transliteration
|
|
Porulal Lavaraip Porulaakach Cheyyum
Porulalladhu Illai Porul
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|