Thirukural

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு.

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)
மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை;அன்பொடு இயைந்த வழக்கு என்ப - அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர். வழக்கு என்பது வழங்கும் நெறி, அஃது இங்கு அதன் பயனைக் குறித்தது. ' அன்பு ' ஆகுபெயர். அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்பது இங்குக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அன்புடைமை தான் மனிதனை மனிதனாக்குவது) அரிய பிறவியாகிய மனிதப் பிறவிக்கு அன்போடு கூடிய வாழ்க்கைதான் . அதன் எலும்போடு பிறந்த குணம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பெறுதற்கரிய மக்களுயிர்க்கு எலும்புடையை உடம்போடு பொருந்திய தொடர்பினை, அன்புடனே பொருந்துவதற்கு வந்த வழியினாலாகிய பயனாகும் என்று அறிந்தோர் கூறுவர்.
தமிழ்க்குழவி உரை:
உயிருக்கு உடம்போடு இணயந்த வாழ்க்கையானது உலகத்தில் பிறர்பால் அன்பு செலுத்தி வாழ்வதற்காகவே அமைந்த ஒன்றாகும்.
Translation
Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone.
Explanation
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).
Transliteration
Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku Enpotu Iyaindha Thotarpu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 73