|
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்.
உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின் மேல் ஏற்றப்பட்டது.
இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்டகாலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக.
|
|
கலைஞர் உரை:
|
|
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அன்பு என்பது மூடி வைக்க முடியாத உணர்ச்சி. ஒருவர் அன்புடையவர் என்பதை அவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு தம்மையறியாமல் கண் கலங்குவதே காட்டிவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அன்பிற்கு அடைத்து வைக்கப்படுகின்ற தாழ்ப்பாள் இல்லை. அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்பினைப் பெற்றவரது துன்பத்தினைக் கண்ட போதே வெளிப்படுகின்ற கண்ணீரே அன்புடையவரது உள் நின்ற அன்பினை எல்லோரும் அறியுமாறு காட்டிவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அன்பு பரந்தது. அதனை அடைத்து வைத்திட இயலாது.அன்புடையவர்களின் கண்களில் பெருகும் கண்ணீரே அதனை வெளிப்படுத்தி விடும்.
|
|
Translation
|
|
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
|
|
Explanation
|
|
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.
|
|
Transliteration
|
|
Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|