Thirukural

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது.

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.)
மணக்குடவர் உரை:
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.
தேவநேயப் பாவாணர் உரை:
கற்று-அறநூல்களையும் அரசியல் நூல்களையுங் கற்று; கண் அஞ்சான்-பகையரசரின் சினப்பார்வைக்கு அஞ்சாது; செலச்சொல்லி-அவர் மனத்திற் பதியுமாறு செய்திகளைச் சொல்லி; காலத்தால் தக்கது அறிவது தூது ஆம்- காலத்திற் கேற்பத் தகுந்த வழிகளைக் கையாள் பவனே நல்ல தூதனாவன். நூற்கல்வி பயன்படாவிடத்துத் தன் மதிநுட்பத்தாலும் உலகியலறிவாலும் சமையத்திற் கேற்றவாறு தக்க வழிகளைக் கையாண்டு, வினைமுடிக்க வேண்டியிருத்தலின், 'தக்கதறிவதாந் தூது' என்றார். 'ஆம்' இங்கும் பிரித்துக் கூட்டப்பட்டது..
கலைஞர் உரை:
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மேலும்) தூதாகப்போன இடத்திலுள்ள நிலைமையை அறிந்து யாரிடத்தும் அஞ்சாமல் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லி, சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்தவனே நல்ல தூதன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நீதி நூல்களைக் கற்று, தான் சென்ற காரியத்தை வேற்றரசன் மனங்கொள்ளச் சொல்லி அவர் கோபமாகப் பார்த்தால் அதற்குப் பயப்பட்டு விடாமல் காலத்தோடு பொருந்தச் செயல் முடிக்கவல்ல அறிவுடையவனே தூதனாவான்.
தமிழ்க்குழவி உரை:
கல்வியிற் சிறந்து பகைவர்தம் பார்வைக்கு அஞ்சாமல். சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்லி காலத்துக் கேற்றவாறு ஒழுகுபவனே தூதனாதல் வேண்டும்.
Translation
An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency.
Explanation
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
Transliteration
Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal Thakkadhu Arivadhaam Thoodhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 686