|
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நினையுங்கால்-ஆராய்ந்து பார்க்குமிடத்து; வினை பகை என்ற இரண்டின் எச்சம்-செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டு வைத்த குறை; தீ எச்சம் போலத் தெறும்-அவிக்காது விட்டு வைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டுவைத்தவரை அழித்து விடும். பல பெரும் பகைவரை அடக்கியதொடு பொத்திகை(திருப்தி)யடைந்து ஒரு சிறு பகைவனை விட்டுவைப்பது பகை யெச்சமாம். பகையொடு சேர்த்துக் கூறியதாலும், 'தீயெச்சம் போலத்தெறும்' என்றதனாலும், வினை யென்றது கேட்டை நீக்கும் வினையை என்பது அறியப்படும். வெள்ளக் காலத்திற் பெருங் குளக்கரை யுடைப்பையெல்லாம் அடைத்தவர் ஒரு சிறு கசிவை விட்டுவைப்பதும், கொடிய நோய்க்கு மருத்துவம் செய்து கொள்பவன் ஒரு சிறு பகுதியைப் புறக்கணிப்பதும், வினையின் எச்சத்திற்கு எடுத்துக் காட்டாம். இனி இக்குறை என்ன செய்யும் என்றிகழாது முடியச் செய்க என்பதாம். இது வலியனுக்குரிய வினை. இனி, வினையெச்சம் என்பது தோற்றோடிய பகைவனைத் தொடராது விட்டுவிடும் போர்வினையெச்சம் எனலுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஆலோசித்துப் பார்த்தால், மேற்கொண்ட காரியத்தைப் பூர்த்தி செய்யாமல் மிச்சம் விட்டுவைப்பதும், பகைமையைத் தீர்த்து விடாமல் மிச்சம் விட்டுவைப்பதும் நெருப்பை அவிக்கும்போது முற்றிலும் அவித்துவிடாமல் ஒரு பொறி நெருப்பை மிச்சம் விட்டு விடுவது போலப் பின்னால் பெருந்துன்பம் உண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்க வேண்டிய பகை ஆகிய இரண்டிலும் எச்சமாக (மீதியாக) வைத்தால், அவை மிச்சமாக விட்டுவிட்ட தீயானது வளர்ந்து விடுவதுபோல வளர்ந்து கெடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தொடங்கிய பணியை முடிக்காமல் விடுவதும் பகைவர் முனைப்பை ஒழிக்காமல் விடுவதும் அணைக்காமல் விட்ட தீக் கங்குகள் போல தீமையைத் தரும்.
|
|
Translation
|
|
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
|
|
Explanation
|
|
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
|
|
Transliteration
|
|
Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal
Theeyechcham Polath Therum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|