|
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்-வினை செய்வதில் திண்மை என்பது அதைச் செய்பவனின் மனத்திண்மையே; மற்றைய எல்லாம் பிற-அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா. மற்றைய பிற வாவன குடி, படை, அரண், நட்பு என்பவற்றின் திண்மைகள். அவையும் வேண்டுமாயினும், செய்வானின் மனத்திண்மை யில்லாவிடத்து அவை பயன்படாவாதலின் 'மற்றையவெல்லாம் பிற' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
காரிய உறுதி என்பது காரியத்தைச் செய்கிறவனுடைய மன உறுதிதான். மற்ற உறுதிகள் எல்லாம் அந்த உறுதிக்கு ஈடாகமாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தொழில் செய்யும்போது திண்மையென்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியவனுடைய மனத்திண்மையே ஆகும்.அதுவல்லாத மற்றவை எல்லாம் திண்மையென்று சொல்லப்பட மாட்டாவாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மேற்கொண்ட பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பது ஒருவர் மன உறுதியைப் பொறுத்ததே. மற்றவை எல்லாம் பொருட்டன்று.
|
|
Translation
|
|
What men call 'power in action' know for 'power of mind'
Externe to man all other aids you find.
|
|
Explanation
|
|
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.
|
|
Transliteration
|
|
Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam
Matraiya Ellaam Pira
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|