Thirukural

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.
தேவநேயப் பாவாணர் உரை:
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச்செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்- அவ்வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும். முடிதல் வெற்றியாய் முடிந்து கருதிய பொருள் தருதல். ஒருவார் என்பது ஒரார் எனக்குறைந்து நின்றது. 'முடிந்தாலும்' ஐயவும்மை பீழைதருவன வினையும் வினையால் வந்த பொருளும்.
கலைஞர் உரை:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பெரியோர்களாலும் நீதி நூல்களாலும் பழியென்று) வெறுத்து விலக்கப்பட்ட காரியங்களை நாமும் வெறுத்து விலக்க வேண்டும். அப்படி விலக்காமல் அவற்றைச் செய்தால் அப்போதைக்கு அவை வெற்றிகரமாக முடிந்தாலும் பின்னால் நிச்சயமாகத் துன்பம் வரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நூலோர் தீயவை யென்று நீக்கிய தொழில்களைப் பொருள் கருதி நீக்காமல் செய்த அமைச்சர்க்கு அவை ஒருவகையில் முடிந்தாலும் துன்பத்தினையே தரும்.
தமிழ்க்குழவி உரை:
செய்யத் தகாதவை என விலக்கப்பட்டச் செயல்களைச் செய்வார்க்கு பணிகள் முடிந்து விட்டாலும் அதனால்பெருந்துன்பம் நேரும்.
Translation
To those who hate reproof and do forbidden thing. What prospers now, in after days shall anguish bring.
Explanation
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
Transliteration
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam Mutindhaalum Peezhai Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 658