|
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வேட்பத்தாம் சொல்லி - தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும்போது அவர் பின்னுங் கேட்க விரும்புமாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி; பிறர் சொல் பயன் கோடல் - பிறர் சொல்லைத்தாம் கேட்கும்போதுமட்டும், அதிற் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக்கண வொழுங்கும் இல்லா திருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - குற்ற மற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம். பிறர்க்கு மேலும்மேலுங் கேட்க விருப்ப முண்டாகுமாறு எதையும் இன்பமாக எடுத்துக்கூறும் ஆற்றல், எல்லார்க்கும் இயற்கை யாகவோ செயற்கையாகவோ அமையாமையானும் , பிறர் சொல்வதன் பொருளை உணர்ந்து கொள்வதே தம் கருமவெற்றிக்கு வேண்டியதாதலானும், "வேட்ப ........... கோள்" என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வழக்காடப் பேசினாலும் இனிமையாகப்பேச வேண்டும்.) தாம் சொல்லவேண்டியதைப் பிறர் விரும்பும்படி இனிமையாகச் சொல்லுவதும், பிறர் சொல்லுவதில் பயனுள் ளவற்றை ஏற்றுக்கொள்வதும் தர்க்கம் பேசுவதன் திறமையில் குற்றமற்ற பேச்சாளரின் கொள்கை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணிவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர்விரும்புமாறு பேசுவதும் பிறர்பேசும் போது கவனமாகக் கேட்டுப் பயன்பெறுவதும் மாட்சிமை மிக்கு குற்றமிலாப் பண்பினரின் கொள்கை.
|
|
Translation
|
|
Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence
|
|
Explanation
|
|
It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.
|
|
Transliteration
|
|
Vetpaththaanj Chollip Pirarsol Payankotal
Maatchiyin Maasatraar Kol
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|