Thirukural

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆக்கமும் கேடும் அதனால் வருதலான் - தன் அரசனுக்கு அவன் அரசுறுப்புக்கட்கும் மேம்பாடும் அழிவும் தன் சொல்லால் வருமாதலால்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அமைச்சன் தன் சொல்லில் தவறு நேராவாறு போற்றிக்காக்க. "முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே." (தொல். கிளவி. 39) என்பதால் சுட்டுப்பெயர் முன்வந்தது. பிறர் சொல்தவறுபோலாது அமைச்சன் சொல்தவறு நாடு முழுவதற்கும் கேடு விளைக்குமாதலால் , 'காத்தோம்பல் சொல்லின்கட்சோர்வு' என்றார். "ஒருசொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்." "நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்." என்பன பழிமொழிகள்.
கலைஞர் உரை:
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நன்மையும் தீமையும் பேசுகின்ற சொல்லைப் பொறுத்து வரும்; ஆகவே, குற்றமான சொற்களைப் பேசிவிடாதபடி நாக்கை அடக்கிக் கவனத்தோடு காத்துக் கொள்ள வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செல்வப் பெருக்கமும் அழிவும் தமது சொல் லால் வரும். ஆகையால், சொற்களில் சோர்வில்லாமல் போற்றிக் காத்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவர்க்கு வாழ்க்கையின் சிறப்பும் சிறுமையும் பேசும் சொற்களாலேயே அமைவதால் சொல்பிறழ்ச்சிகள் ஏற்படாதவாறு காத்துக் கொள்ளல் வேண்டும்.
Translation
Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defend.
Explanation
Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
Transliteration
Aakkamung Ketum Adhanaal Varudhalaal Kaaththompal Sollinkat Sorvu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 642