|
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செயத்தகுவன அறிந்த விடத்தும் அது செய்யுங்கால் உலக நடை அறிந்து செய்க. உலகநடை அறிதலாவது அரசர் சீலமும் பரிவாரத்திலுள்ளார் நிலைமையும் அறிதல். இவை யறியாது செய்யிற் குற்றமாமென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செயற்கை அறிந்தக் கடைத்தும் -நூலறிவால் வினை செய்யுந் திறங்களை அறிந்த விடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - உலகியலை - அறிந்து அதனொடு பொருந்தச் செய்க. பலசெய்திகளில் உலகியலும் நூலியலும் வேறு பட்டிருப்பதால், உலகியலொடு பொருந்தாதவற்றைச் செய்யற்க; செய்யின் உலகம் பழிக்கும் என்பதாம். 'கடைத்து' என்பதில் 'து' முதனிலைப் பொருளீறு (பகுதிப்பொருள் விகுதி). "பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது." என்னும் பழமொழியும், "உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்." (140) என்னுங் குறளும், இங்குக் கவனிக்கத் தக்கன
|
|
கலைஞர் உரை:
|
|
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படி நூல் அறிவோடு மதிநுட்பம் என்கிற சுருதியும் யுக்தியும் ஒத்த பின்பும் அவை அனுபவத்துக்குப் பொருந்துமா என்பதையும் அறியவேண்டும்.) ஆராய்ந்து செய்யவேண்டியதை அறிந்துகொண்ட பின்னும் அப்போதுள்ள உலக நடைக்கு அக்காரியம் ஒத்துக்கொள்ளுமா என்பதையும் அறிந்து செய்யவேண்டும் (என்ற யோசனையுள்ளவனே மந்திரி.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நூல்வழிகளால் தொழில் செய்யும் திறங் களை அறிந்தபோதும், அவ்வப்போது நடக்கின்ற உலக இயற்கையினை அறிந்து அதனோடு பொருந்தச் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உலக நடைமுறைகளை அறிந்திருந்தபோதும் ஒருவன் இயற்கையின் இயக்க நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப இசைவாகச் செயல்படவேண்டும்.
|
|
Translation
|
|
Though knowing all that books can teach, 'tis truest tact
To follow common sense of men in act.
|
|
Explanation
|
|
Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.
|
|
Transliteration
|
|
Seyarkai Arindhak Kataiththum Ulakaththu
Iyarkai Arindhu Seyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|