|
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது.
ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர்
முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தெய்வ சகாயம் இல்லாததால் ஒரு காரியம் முயற்சி செய்தும் முடியாமற் போகலாம். ஆனாலும், எவ்வளவுக்கெவ்வளவு முயற்சி செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலுழைத்த பலனாவது இல்லாமற் போகாது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முயன்ற தொழில் ஊழ்வினையால் கருதிய பயனைத் தராமல் போனாலும், வருந்திய வருத்தத்தின் கூலி அளவு பயனைத் தரும்; வீண் போகாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தெய்வத்தின் அருளால் ஒரு செயல் முடியாதாயினும் ஒருவர் விடா முயற்சியால் மெய்வருத்தி உழைப்பின் அதற்கு உரிய ஊதியம் உண்டு.
|
|
Translation
|
|
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.
|
|
Explanation
|
|
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
|
|
Transliteration
|
|
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|