|
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்.
இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் நன்றிசெய்தல் என்னும் பெருமிதம் ; தாளாண்மை என்னும் தகைமைக் கண்ணே தங்கிற்று - விடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம்.
வெறுங்கையால் வேளாண்மை செய்தல் கூடாமையின் , வேளாண்மைக்கு இன்றியமையாத பொருள் தாளாண்மையாலேயே வருதல் பற்றி 'தகைமைக்கட்டங்கிற்றே' என்றார் . பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி
மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உலகத்தில் சிறந்த காரியங்கள் நடந்தேறுவதெல்லாம் விடாமுயற்சியால்தான்.) உலகத்துக்கு உபகாரமான காரியங்களைச் செய்தவர்களுடைய புகழெல்லாம் விடாமுயற்சி என்ற பெருங் குணத்தில் அடங்கியதே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எல்லோருக்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு, முயற்சி என்று சொல்லப்பட்ட உயர்ந்த குணத்தினிடத்தில் நிலை பெற்றிருப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என்றும் பிறர்க்கு உதவி வாழும் பேராண்மை என்பது விடா முயற்சி யொடு கூடிய தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
|
|
Translation
|
|
In strenuous effort doth reside
The power of helping others: noble pride!.
|
|
Explanation
|
|
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
|
|
Transliteration
|
|
Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|