|
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்.
இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - ஒரு வினை செய்யுமுன் தம்மைச்சிறியவராகக் கருதி அவ்வினை தம்மாற் செய்தற்கு அரிதென்று தளராமை வேண்டும் ; முயற்சி பெருமை தரும் - முயற்சியே அவ்வினையைச் செய்து முடித்தற் கேற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும் .
சிறியவராகக் கருதி யென்பது பெருமை தரும் என்பதால் வருவிக்கப்பட்டது . வினை செய்தல் என்பது அதிகாரத்தால் வந்தது . விடா முயற்சியால் அரிய வினையும் எளியவினையாம் . ஆகவே , வினைமுடிப்பிற்கு ஏதுவாக மட்டு மன்றி அதன் விளைவாகவும் பெருமை உண்டாகுமென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற
நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு காரியம் செய்து அது கைகூடாவிட்டால்) அது செய்வதற்கு முடியாத காரியம் என்று தளர்ந்து விடாமல் இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'இத்தொழில் செய்து முடிக்க அருமையானது' என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும். அதனை முடித்தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எந்தச் செயலையும் இது நம்மால் முடியுமா என்று மனம் தளராமை வேண்டும். விடாமுயற்சி வெற்றி வாய்ப்பை நல்கும்.
|
|
Translation
|
|
Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.
|
|
Explanation
|
|
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
|
|
Transliteration
|
|
Arumai Utaiththendru Asaavaamai Ventum
Perumai Muyarsi Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|