|
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓர் ஒற்றன் ஒற்றி வந்து அறிவித்த செய்திகளையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் -வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை யறிந்து கொள்க.
பகைவரோ டொத்து நின்று உண்மைக்கு மாறாகக் கூறும் ஒற்றருமிருப்பராதலின் ,ஓரொற்றன் கூற்றைக்கேட்ட மட்டில் நம்பி விடக்கூடாதென்றும் , ஒற்றர் பலரையுந் தனித்தனி மறைவாகக் கேட்டு அவர் கூற்றுக்கள் ஒத்துவந்த வழியே நம்பவேண்டு மென்றும் ,பாதுகாத்துக் கூறினார். ஒற்றுதல் மறைவாகப் பொருந்தியறிதல். உம்மை யிரண்டனுள் முன்னது உயர்வு சிறப்புக் கலந்த எச்சம். பின்னது இறந்தது தழுவிய எச்சம் .இதனால் ஒற்றரை ஆளும் வகை கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக்
கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு
செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா
என்ற முடிவுக்கு வரவேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அரசனானவான்) ஓர் ஒற்றன் உளவறிந்து வந்து சொன்ன சேதிகளையும் வேறோர் ஒற்றனைக் கொண்டு அதே சேதிகளை விசாரித்து வரச்செய்து அதன் பிறகே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஓர் ஒற்றன் தெரிந்து வந்து அறிவித்த காரியத்தையும் மற்றோரு ஒற்றன் கொண்டுவந்த செய்தியுடன் ஒப்புமை கண்டு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஓர் ஒற்றன் வழியாக அறிந்த தகவல்களையும் மற்றுமோர் ஒற்றன்மூலம் தெரிந்து இரண்டையும் ஒப்பிட்டுத் தெளிவு பெறுதல் நன்று.
|
|
Translation
|
|
Spying by spies, the things they tell
To test by other spies is well.
|
|
Explanation
|
|
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
|
|
Transliteration
|
|
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|