Thirukural

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)
மணக்குடவர் உரை:
வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.
தேவநேயப் பாவாணர் உரை:
கடாஅ உருவொடு -ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி ; கண் அஞ்சாது - அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத்தொடங்கின் , அவர் சினத்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று ; யாண்டும் உகாமை வல்லதே -எவ்விடத்திலும் எவ்வழியைக் கையாளினும் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமை வல்லவனே; ஒற்று - சிறந்த ஒற்றனாவான். கடுத்தல் ,அயிர்த்தல் , என்பன பகைவன் அல்லது ஒற்றன் என்று ஐயுறுதல். கடாத (கடுக்காத ) வடிவாவன;துறவியர் ,வணிகர் , வழிப்போக்கர், இரப்போர் முதலியோர் தோற்றம்; உகுத்தல் சிந்துதல். அது இங்கு மறைவெளியிடுதலைக் குறித்தது, 'கடா' கடு என்னும் வினையடிப்பிறந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'கடா அ ' ,'உகாஅமை' இசைநிறை யளபெடைகள்.ஏகாரம் தேற்றம்.'ஒற்று' வடிவால் அஃறிணையாதலின் அஃறிணை முடிவு கொண்டது.
கலைஞர் உரை:
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தன்னை யாரும் சந்தேகிக்க முடியாதபடி மாறுவேடத்துடன் அச்சமில்லாமல் எங்கும் சென்று தான் இன்னான் என்பதையும், தான் வந்த காரியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி விடாதபடி உளவுகளை அறிந்துவரக்கூடியவனே ஒற்றன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறிதற்குச் செல்லும் ஒற்றன் மற்றவர்களால் சந்தேகிக்கப்படாத உருவத்தோடு பொருந்தி, அவர்கள் சந்தேகித்து, அறியத் தொடங்கினால் அஞ்சாமல் நின்று, பகைவர் என்ன செய்தாலும் மனத்தில் இருப்பதைச் சொல்லா தவனே ஒற்றனாவான்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் ஐயப்படாத கம்பீரத் தோற்றமுடன், எவருக்கும் அஞ்சாது தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தாத வல்லமை உடையவனே ஒற்றன்.
Translation
Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies.
Explanation
Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies.
Transliteration
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum Ukaaamai Valladhe Otru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 585