|
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர். (நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர், எல்லாரானும் விரும்பத்
தக்க நாகரிகத்தை விரும்புவார்.
நாகரிகம்- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.
நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.
"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"
என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள்
நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதைவிடச் சிறந்த தாட்சிண்ணிய குணமுள்ள தியாகிகள் அதனால் தமக்கு அபாயம் வருமென்றாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.) பலபேருக்கான நன்மை வரும் என்றால் தாட்சிண்ணியத்தை விரும்புகின்றவர்கள், விஷத்தை ஊற்றிக் கொடுத்தாலும் அதை உண்டுவிடச் சம்மதிப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பழகியவர்கள் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் மறுக்க முடியாமல் அத்தனையும் உண்டு பின்பும் அவருடன் பொருந்தி இருப்பர் யாரென்றால், யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை விரும்புகிறவர்கள் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தம்மோடு நெருங்கிப் பழகியவர் நஞ்சை அளிப்பினும் மாறுபடாது உண்ணத் தலைப்படுவர் நற்பண்பாகிய நாகரிகம் வேண்டுபவர்.
|
|
Translation
|
|
They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy.
|
|
Explanation
|
|
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.
|
|
Transliteration
|
|
Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam Ventu Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|