|
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்- தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்து உளபோல் எவன் செய்யும்- முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்?
குருட்டுக் கண்ணிற்கும் கண்ணோட்ட மில்லாத கண்ணிற்கும் வேறுபாடில்லை .' எவன் செய்யும்? என்னும் வினா எதிர்மறை விடையை நோக்கிற்று.போதா அளவினின்று நீக்குதற்கு 'அளவினான் ' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்
முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும்
இல்லாதவைகளாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கண்ணின் பயன் என்னவெனில்), அளந்து அறியக் கூடிய தன்மையோடு, எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தி, பார்வையினாலேயே நிலைமைகளை ஆராய்ந்துகொள்ளச் செய்ய முடியாத கண்கள் முகத்தில் இருந்து என்ன பயன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அளவு மீறாத கண்ணோட்டம் (தாட்சண்யம்) இல்லாத கண்கள், பார்ப்பதற்கு - பார்ப்பவர்களுக்கு - இருப்பதுபோலத் தோன்றுமே அல்லாமல் என்ன பயனைச் செய்யும்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வியலுக்குத் தேவையான அருள்நோக்கு கண்களுக்கு இல்லையேல், முகத்தில் உள்ளன என்பதைத் தவிர அவற்றால் வேறு என்ன நன்மை?
|
|
Translation
|
|
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.
|
|
Explanation
|
|
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.
|
|
Transliteration
|
|
Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|