|
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் உண்டாகாநின்றது. ('கழிபெருங்காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகுண்டு' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது.
இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண்ணோட்டம் என்னும் கழிபெருங்காரிகை உண்மையான்-கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே ; இவ்வுலகு உண்டு- இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது.
கண்ணோட்டம் மக்களெல்லாரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பேனும் , அரசருக்கு இன்றியமையாது வேண்டுவதாம்.நாடுமுழுதும் அரசன் கையிலிருத்தலால்,அவனிடத்திற் கண்ணோட்டமுண்மை குடிகள் இன்பமாக வாழ்வதற்கும் ,இன்மை ஏமமின்றி மாள்வதற்கும் ஏதுவாம். அகத்தழகு புறத்தழகு என அழகு இருவகைத்தாதலின், கண்ணோட்டம் காரிகையெனப்பட்டது.மேலும் அதன் சிறப்பு நோக்கி 'கழிபெரு' என ஈரடையுங் கொடுக்கப் பெற்றது. இது மீமிசைச் சொல். "கண்ணோட்டம்...உண்டிவ்வுலகு". என்பது,"உண்டாலம்ம விவ்வுலகம் .....பிறர்க்கென முயலுநருண்மை யானே". (புறம். 182) என்பது போன்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம்
எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை
அடைகிறது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தாட்சிண்ணியம் என்ற மிகப் பெரிய நற்குணம் மக்களுக்குள் இருப்பதால்தான் இந்த உலக சமுதாயம் நடந்து வருகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கண்ணோட்டோம் (பழகியவர் மீது அன்புடைமை) என்னும் சிறப்புடைய அழகு இருந்து வருவதால்தான் இந்த உலகம் இருந்து வருகின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அருள்நோக்கு என்கிற அற்புத அழகு இருப்பதால் தான் இந்த உலகு அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
|
|
Translation
|
|
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.
|
|
Explanation
|
|
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.
|
|
Transliteration
|
|
Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|