|
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும்.
இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிறை செய்யா வேந்தன் -போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள்ளாத அரசன் ; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் -போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான்.
படைமறவர் அஞ்சித் தன்னை விட்டு நீங்குதலாற் பகைவராற் பிடிக்கப்பட்டு, நாடோ செல்வமோ , உயிரோ அம் மூன்றுமோ இழக்க நேருமாதலின் , 'வெருவந்து வெய்து கெடும்' என்றார்.
'வெய்து' என்பது கடுந்துன்புற்று என்றுமாம்.இதனால் அரசன் தானே அஞ்சும் வினையும் அதன் தீங்கும் கூறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர்
வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில், குடிகள் நடுங்கும்படியான செயல்களால்) எச்சரிக்கையில்லாமல் நடந்துகொள்வதால் குடிகளிடம் மனத்தாபம் வளர்ந்துகொண்டே வந்து திடீரென்று எதிர்ப்பு வந்துவிடுகிற சமயத்தில் குடிகளுடைய ஆதரவில்லாமல் உடனே கெட்டுப் போவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பகைவர் வருவதற்கு முன்பாகவே தனக்குப் புகலிடமானதோர் அரண் செய்து கொள்ளாத அரசன் போர்வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாததால் விரைவில் கெடுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைவந்த பொழுதே தக்கப் பாதுகாப்பரண்களை அமைத்துக் கொள்ளாத வேந்தன் துன்பத்திற்காளாகி விரைந்து கெடுவான்.
|
|
Translation
|
|
Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.
|
|
Explanation
|
|
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.
|
|
Transliteration
|
|
Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan
Veruvandhu Veydhu Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|