|
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். '(வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்.
இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கடுஞ்சொல்லன் கண் இலன் ஆயின் -அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்- அவனது பெருஞ்செல்வம் நீடித்த லின்றி அப்பொழுதே கெடும்.
கடுஞ்சொல்லும் கண்ணோட்டமின்மையும் குடிகட்கு அச்சத்தை விளைத்தலின், வெருவந்த செயல்களாயின.'கண்' ஆகுபெயர். விரைந்தழியத்தகாத பெருஞ்செல்வமாயினும் என்பார்-'நெடுஞ்செல்வம்' என்றார். இனி, நீண்ட காலமாகத் தொகுக்கப் பெற்ற முன்னோர் செல்வம் எனினுமாம். ஏகாரம் பிரிநிலை. இதுகாறும் நாற்குறள்களால் குடிகளஞ்சும் வினைகளும் அவற்றின் தீய விளைவுகளும் கூறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்
பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காணக் கிடைக்காவிட்டாலும் இனிய முகம் காட்டா விட்டாலும் பாதகமில்லை. அதற்கு மேலும்) கடூரமான வார்த்தை களும் இரக்கமில்லாத தன்மையும் உள்ள அரசன் எவ்வளவு பெரிய செல்வச் சிறப்புக்கள் உள்ளவனானாலும் அவனுடைய செல்வாக்கு விரைவில் அழிந்துபோகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அரசன் கொடிய சொல்லினையுடையவனாகவும், கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவனாகவும் இருந்தால், அவனுடைய பெரிய செல்வம் நீடுதலில்லாமல் அப்பொழுதே கெடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஆட்சிபுரிபவர் கடுமையான சொற்களைப் பேசுபவராகவும் கருணையில்லாதவராகவும் இருந்தால் அவர் பெற்ற வளம், தொடர்ந்து பெருகாமல் தானே கெட்டொழியும்.
|
|
Translation
|
|
The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.
|
|
Explanation
|
|
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.
|
|
Transliteration
|
|
Katunjollan Kannilan Aayin Netunjelvam
Neetindri Aange Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|