|
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மன்னவன் முறைகோடிச் செய்யின் - அரசன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் ; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம்பொழிதலைச் செய்யாது.
உறைகோடுதலாவது மழை இயற்கையாகப் பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமை . "வானம் பெயல்" என்பது 'வானம் பெய்கிறது' வையகம் (பூமி) விளைகிறது , என்னும் வழக்கைத் தழுவியது. உறைத்துப் பெய்யும் மழை உறை.
"இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு"
(குறள். 545)
என்றதனால்,
இயல்புளிக் கோலோச்சா மன்னவ னாட்டிற்
பெயலும் விளையுளா மில்.
என்பது தானே வெளியாம்.
"கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னு யிரில்லை"
மணிமேகலை (7 : 8 - 10)
|
|
கலைஞர் உரை:
|
|
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயனளிக்கும்
இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி
வைத்து வளம் பெறவும் இயலாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குடிகளுக்குப் பாதுகாப்பில்லாதது போல்,தர்மங்களுக்குப் பாதுகாப்பில்லாதது கொடுங்கோன்மை. தர்மங்கள் இல்லாத கொடுங்கோல் ஆட்சியில்) அரசன் முறை தவறி ஆட்சி நடத்தினால் அந்த நாட்டில் வானமும் தன்னுடைய பெருமை பொருந்திய முறை தவறி மழை பொழிய மறத்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்வானானால் அவன் நாட்டில் பருவ மழை இல்லாமற்போகும்படி மேகம் மழை பொழிதலைச் செய்யாது..
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மன்னவன் அறம் பிறழ்ந்து ஆட்சி செய்வானாயின் பருவநிலை தவறி வானமும் முறையாக மழைதராதமையும்.
|
|
Translation
|
|
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
|
|
Explanation
|
|
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
|
|
Transliteration
|
|
Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|