|
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். (உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வேந்தன் பொது நோக்கான் வரிசையா நோக்கின் - அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின் ; அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர் .
எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் கடையாயார் என்றோ , முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப்பல வகுப்பின ராகவோ , இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால் , தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொது நோக்கை விலக்கி எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார் . 'வேந்தன்' என்பது இங்குத் தன் சிறப்புப் பொருள் குறியாது அரசன் என்னும் பொருள் குறித்து நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப
அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும்
அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒரு குடும்பி தன்னுடைய சுற்றத்தார் அனைவரையும் சரிசமானமாக நடத்தலாம். ஆனால் ஓர் அரசன்) தன் சுற்றமாகிய துணைவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தி விடாமல் அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்ய வேண்டும். அதனால் அநேகர் அரசனை விரும்பித் துணைப்பலமாகச் சூழ்ந்திருப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எல்லோரையும் ஒரே தன்மையராக நோக் காமல், அரசன் அவரவர் தகுதிக்கு ஏற்ப நோக்கிக் கவனிப்பானாகில், அச்சிறப்பு நோக்கி அவனை விடாமல் வாழ்கின்ற சுற்றத்தார் பலராவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அரசன் எல்லோரையும் ஒரே நிலையில் பொதுவாகப் பார்க்காமல் அவரவர் தகுதிக் கேற்பப் பார்த்துச் சிறப்புச் செய்வானாயின், அதற்காகக் காத்திருப்பார் பலர்.
|
|
Translation
|
|
Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.
|
|
Explanation
|
|
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.
|
|
Transliteration
|
|
Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin
Adhunokki Vaazhvaar Palar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|