|
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க. (வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக.
பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வாரி பெருக்கி - பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து ; வளம் படுத்து - அவற்றாற் செல்வத்தை வளர்த்து ; உற்றவை ஆராய்வான் - அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவனே ; வினை செய்க - அரசனுக்குத் தலைமை யமைச்சனாக விருந்து பணியாற்றுக.
வருவாய்கள் அரசிறை (புரவுவரி ) , திறை , தண்டம் , புதையல் , உழவு , கால்நடைவளர்ப்பு , கைத்தொழில், வாணிகம் முதலியன . செல்வங்கள் அவற்றால் வருவனவும், அரசனுக்கும் குடிகட்கும் இன்பநுகர்ச்சிப்பொருட்டு அமைக்கப்படுவனவுமாம். இடையூறுகள் அரசியல் வினைஞர் , அரசன் சுற்றத்தார் , பகைவர் , கள்வர் , கொள்ளைக்காரர் , அஃறிணையுயிரிகள் , இயற்கை தெய்வம் என்றிவரால் வரும் நலிவும் இழப்பும் . அஃறிணையுயிரிகள் பூச்சிபுழுக்களும் காட்டு விலங்குகளும் போல்வன . இயற்கையால் நேர்வன வெள்ளப்பாழ் புயற்சேதம் முதலியன . தெய்வத்தால் வருவன கொள்ளை நோய் , பஞ்சம் முதலியன , இயற்கை யென்பது இயல்பாக நிகழ்வதன் மிகையென்றும் , தெய்வம் என்பது இயற்கைக்கும் மக்கள் தடுப்பிற்கும் அப்பாற்பட்ட தென்றும் , வேறுபாடறிக.
|
|
கலைஞர் உரை:
|
|
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி,
இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும்
திறனுடையவன்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த அனுபவத்தோடு) வருகின்ற வழிகளை அதிகப் படுத்தி, பொருளாதார நிலைமையை வளப்படுத்தி) அந்த வளம் நிலைப்பதற்கான முறைகளை ஆராயக்கூடியவன் காரியம் செய்ய வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருள் வருகின்ற வழிகளை விரியச் செய்து செல்வங்களை வளர்த்து அவற்றிற்கு உண்டான இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன், மன்னனுக்குத் தொழில் செய்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செல்வம் வரும் வழிகளைப் பெருக்கி, அதனால் வளமையை உருவாக்கி, ஏற்படும் இடையூறுகளையும் ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
|
|
Translation
|
|
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.
|
|
Explanation
|
|
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
|
|
Transliteration
|
|
Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|