|
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின்.
இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் .
மயில்தோகையும் அளவுக்கு மிஞ்சி வண்டியிலேற்றின் அச்சொடியும் என்பது , பகைவர் தனித்தனி மிகச்சிறியாராயினும் மிகப்பலர் ஒன்று கூடின் , தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்னும் பொருள்பட நிற்றலால் , பிறிதுமொழிதல் என்னும் அணியாம் .இது நுவலாநுவற்சியென்றும் ஒட்டு என்றுஞ் சொல்லப்படும் . பகைவர் சிறியராயினும் மிகப்பலரை ஒருங்கே பகைக்கக் கூடாதென்பதும் , பகைவர் வலியைத் தனித்தனி அறியாது தொகுத்தறிதல் வேண்டுமென்பதும் , இதனாற் கூறப்பட்டன . உம்மைஇழிவு சிறப்பு , சாகாடு என்பது சகடம் என்னும் சொல்லின் பல்வடிவுகளுள் ஒன்றாம் . இதுவுந்தென்சொல்லே . 'இறும்' என்னும் துணைவினை முதல்மேல் நின்றது , 'காலொடிந்தான்' என்பதில் ஒடிந்தான் என்பது போல . 'சாலமிகுத்து' மீமிசைச்சொல் .
|
|
கலைஞர் உரை:
|
|
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின்
அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(யாரானாலும் தம்முடைய சக்திக்கு மீறிச் செய்துவிட முடியாது.) மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போதும் என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிக்கப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மயில்இறகு எடை குறைவு தான், ஆயினும் வண்டியில் அளவுக்கு மீறி ஏற்றப்படுமாயின் வண்டியின் அச்சு தாங்காது முறிந்து விடும்.
|
|
Translation
|
|
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.
|
|
Explanation
|
|
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
|
|
Transliteration
|
|
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|