|
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு. (உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது.
இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எண்பொருளவாகச் செலச் சொல்லி-பிறருக்குச் சொல்லும்போது அரியபொருள்களையும் எளிய பொருள்களாக அவர்க்கு விளங்குமாறு சொல்லி; தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு -தான் மட்டும் பிறர்வாய்க் கேட்கும் அருஞ்சொற்களின் நுண்பொருளை எளிதாய் அறிந்து கொள்வது அறிவாம்.
பொருளை அறிவிக்கும் வாயில் சொல்லேயாதலாலும், அரிய பொருளை எளிதாக்குவதும் எளிய பொருளை அரிதாக்குவதும் சொல்லின் தன்மையைப் பொறுத்திருத்தலாலும் , 'எண்பொருள வாகச் செலச்சொல்லி ' என்றார். 'வாய் ' ஆகுபெயர். அறிவு என்றது அறிவுடைமையை.
|
|
கலைஞர் உரை:
|
|
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின்
இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான
கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தான் சொல்வதைப் பிறர் சுலபமாகத் தெரிந்து கொள்ளும்படி விளங்கச் சொல்லி, பிறர் சொல்லுவது விளங்கும்படி அமையாவிட்டாலும் அதன் கருத்தைத் தெரிந்துகொள்ளச் செய்வது அறிவுதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான், பிறர் அறிந்து கொள்ளுவதற்கு எளிமையாக மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, பிறர் வாயில் கேட்கும் சொற்களில் நுணுக்கமான பொருள்களைக் கண்டறிய வல்லது அறிவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர்க்குச் சொல்லும் போது எளிமையாகப் புரியும் படிச் சொல்வதும் பிறர் சொல்வதைக் கேட்கும் போது அதிலுள்ள நுட்பங்களைத் தேர்ந்து கொள்வதும் அறிவு.
|
|
Translation
|
|
Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men's discourse takes in.
|
|
Explanation
|
|
To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.
|
|
Transliteration
|
|
Enporula Vaakach Chelachchollith Thaanpirarvaai
Nunporul Kaanpa Tharivu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|