Thirukural

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும். (அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண் மாண் புனை பாவை அற்று - சுண்ணச் சாந்தினால் மாட்சிமைப்படப் புனைந்தமைத்த படிமையின் எழுச்சியும் அழகும் போலும். நுண்மாண் நுழைபுலத்தின் தன்மையாவது, அறிதற்கரிய நிரடான பொருளையறிதலும் சிக்கலான செய்தியை விரைந்து விடுவித்தலுமாம். 'பாவை' ஆகு பொருளது. எண்பேரெச்சமின்றிப் பிறப்பது. போன்றே உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலுமரிது (சீவக.முத்தி, 154). ஆயினும், கல்வியறிவில்லாதவழி அதனாற் சிறப்பில்லை யென்பதாம். "ஆடையில்லாதவன் அரை மாந்தன், கல்வியில்லாதவன் கால்மாந்தன்", என்பது ஒரு சொலல்லடை.
கலைஞர் உரை:
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கல்வி யில்லாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும்) நல்ல நூல்களை நுட்பமாக ஆராயும் கல்வி யறிவில்லாதவர்களுடைய அழகின் சிறப்பு மண்ணைக்கொண்டு திறமையுடன் செய்யப்பட்ட பொம்மையின் அழகை ஒத்ததாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நுண்ணியதாகப் பெருமையுடையதாகிப் பல நூல்களிலும், சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சி யும், அழகும் மண் சாந்தினால் செய்யப்பட்ட பாவையி னுடைய எழுச்சியும் அழகும் போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
நூல்களை ஆய்ந்து தேர்ந்து நுட்பமான அறிவாண்மை பெறாத ஒருவனுடைய எழில் தோற்றம் மண்ணால் செய்யப்பட்ட ஓர் அழகியப் பொம்மையைப் போன்றதாகும்.
Translation
Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.
Explanation
The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.
Transliteration
Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam Manmaan Punaipaavai Yatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 407