Thirukural

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது. (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவனை வஞ்சிப்பது அவா - அருளுடைமை முதல் மெய்யுணர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாத்துறவறங்களையுங் கடைப்பிடித்து வீடுபெறும் நிலையிலுள்ள ஒருவனையும், சோர்வு கண்டு புகுந்து மீண்டும் பிறப்பின்கண்வீழ்த்திக் கெடுக்கவல்லது அவாவாம்; அஞ்சுவதே அறன் - ஆதலால் அவ்வவாவிற்கு அஞ்சி அது நேராவாறு காத்துக்கொள்வதே இறுதியில் மேற்கொள்ள வேண்டிய அறமாம். தொடக்க மிலியாக வந்த அவா, முற்றத் துறந்தவன் ஒரோவழிச் செம்பொருள் காண்டலை யொழிந்து கவனக் குறைவால் தன்னைக் காவானாயின், அது வழியாக அவனறியாமற் புகுந்து மீண்டும் பிறப்பினையுண்டாக்கு மாதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். அது வராமற் காத்தலாவது இடைவிடாது உன்னத்தில் ஊன்றுதல். 'ஓரும்' ஈரிடத்தும் அசை நிலை. பிரித்துக் கூட்டப்பட்ட ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆசைகள் வந்துவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.) ஒருவனை ஏமாற்றிவிடுவது இந்த ஆசைதான். அதற்கு அஞ்சி நடப்பதே அறம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மெய்யுணர்தல் முதலியன எல்லாம் எய்தி அவற்றால் வீடு எய்தற்குரிய ஒருவனை வஞ்சனையால் புகுந்து வீழ்த்தவல்லது, ஆசையேயாகும். ஆதலால், அந்தண் அவாவினை அஞ்சிக் காப்பதே துறவறமாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவனை வஞ்சித்துத் துயரத்தில் ஆழ்த்துவது ஆசையே. ஆசை தன்னைப் பற்றிக் கொள்ளாதவாறு அஞ்சி வாழ்வதாயின் வாழ்வில் அறம் தழைக்கும்.
Translation
Desire each soul beguiles; True virtue dreads its wiles.
Explanation
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.
Transliteration
Anjuva Thorum Arane Oruvanai Vanjippa Thorum Avaa

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 366