Thirukural

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அறவினை - அறமாகிய நல்வினையை; ஒல்லும் வகையான் - தத்தமக் கியன்றவாறு; செல்லும்வாய் எல்லாம் ஒவாதே செயல் - அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க. ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவறவினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும், செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நன் சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இனத்தையுங் குறித்தலால், 'செல்லும் வாய்' என்பன எல்லா அறத் துறைகளுமாம்.
கலைஞர் உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அதனால் முடிந்தவரையிலும் தர்ம காரியங்களைச் சமயம் வாய்த்த போதெல்லாம் மறக்காமல் செய்யவேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
இயன்றபொழுதுகளிலெல்லாம், இயன்றவாறெல்லாம், இயலும் இடங்களில் எல்லாம் ஓயாது ஓயாது அறப்பணிகளைச் செய்துகொண்டேயிருத்தல் வேண்டும்.
Translation
To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.
Explanation
As much as possible, in every way, incessantly practise virtue.
Transliteration
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe Sellumvaai Ellaanj Cheyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 33