Thirukural

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும்-தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்ப மாகுஞ் செல்வம் பெரிதாமென்று ஆரியர் கூறினும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை-தமிழச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம். 'எனினும்' என்னுஞ் சொல்லை "நல்லாறெனினுங் கொளல்தீது" (குறள்.222) என்பதிற்போற் கொள்க. நன்றாகும் ஆக்கமாவது விண்ணுலகத்தில் தேவராகத் தோன்றி நுகரும் இன்பம். வேள்வி வேட்டல் ஆரியர் வழக்கமேயாதலாலும், அதை எதிர்ப்பவர் தமிழரேயாதலாலும், ஆரியர் தமிழர் என்னுஞ் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன. கடைக்கழகக் காலத்திலும் பின்பும் தமிழ வேந்தரும் ஆரிய வேள்வி வேட்டனரேயெனின், அவர் ஆரியப் பார்ப்பனரை நிலத்தேவரென்று நம்பித்தம் அறியாமையாலும் ஏமாற்றப்பட்ட நிலையிலும் செய்தமையால், அது தமிழ அறிஞரால் ஒப்புக்கொள்ளப் பட்ட தன்றென்று கூறி விடுக்க.
கலைஞர் உரை:
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கொலை செய்து அதனால்) பல நன்மைகள் வருமென் றாலும், பெருத்த செல்வம் கிடைக்குமென்றாலும் மேலோர்கள் பிற உயிரைக் கொன்று வரக்கூடிய எந்தச் செல்வத்தையும் மிகவும் இழிவாகத்தான் கருதுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கொலை செய்வதால் நன்மையாக ஆகின்ற செல்வம் பெரிதுதான் என்று கூறப்பட்டாலும், துறவால் அமைந்த சான்றோர்களுக்கு உயிரைக் கொல்லுவதனால் வரும் செல்வம் இழிவானதாகும்.
தமிழ்க்குழவி உரை:
ஒரு கொலையை நிகழ்த்துவதால் அதன் மூலம் பெறும் பொருள் மிகையாக இருப்பினும், சான்றோர்க்குகொலைத் தொழில் மூலம் வரும் செல்வம் இழிவானதே
Translation
Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despise.
Explanation
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.
Transliteration
Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk Kondraakum Aakkang Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 328